சுவிட்சர்லாந்தில் இரு ஏரீஎம் இயந்திரங்கள் தகர்ப்பு : சொத்து சேதம் கணிசமானது

சுவிட்சர்லாந்தின் நொசத்தல் மாநிலத்தில் (NE) உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இரு தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நொசத்தல் பகுதியில் உள்ள மரின் வர்த்தக மையத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் நுழைந்த மூவர் அடங்கிய குழுவினரே இந்த நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. இதன் விளைவாக ஏற்பட்ட சொத்து சேதம் கணிசமானது எனவும் , திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரின் மையத்தைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குற்றவாளிகளை தேடும் பணியில் பல்வேறு பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.