சுற்றுலா பயணியை மலையிலிருந்து தள்ளிவிட்டு உடமைகளை திருடிச்சென்ற ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

26 வயதான அல்ஜீரிய நாட்டு சுற்றுலாப் பயணிக்கு போதைப்பொருள் கொடுத்து, 800,000 மதிப்புள்ள அவரது பொருட்களைத் திருடி கொண்டு, ராவண எல்ல அருகே ஒரு பள்ளத்தாக்கில் அவரை தள்ளிவிட்டதாக தெரிவித்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகை கார் ஓட்டுநரான ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, நுவரெலியாவில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சாரா அர்ரார் என அடையாளம் காணப்பட்ட குறித்த சுற்றுலாப் பயணி, கடந்த மே 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.

அவர் முதலில் கண்டிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து நுவரெலியாவுக்குச் சென்றுள்ளார். பின்னர், நுவரெலியாவிலிருந்து எல்ல பகுதிக்கு பயணிக்க, அவர் ஒன்லைனில் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சுற்றுலா பயணி முன்பதிவு செய்த வாடகை கார் சாரதி, பயணத்தின் போது குறித்த சுற்றுலா பயணிக்கு பழச்சாறு ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார். அதனை குடித்த சுற்றுலா பயணி மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் காரை ராவண எல்ல அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு ஓட்டிச் சென்று, மயக்கமடைந்த சுற்றுலாப்பயணியான பெண்ணை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து, 30 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு, அவரது பணம் மற்றும் உடமைகளை எடுத்து கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பள்ளத்தில் விழுந்த குறித்த சுற்றுலா பயணி, பலத்த காயங்களுடன் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் அவர் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிப்பட்டார்.

முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபரான சாரதியை கைது செய்து, அவரிடமிருந்து வாடகை கார் மற்றும் சுற்றுலா பயணியிடமிருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.

சந்தேக நபர் மகஸ்தோட்டாவைச் சேர்ந்த, 70 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எனவும், அவர் தற்போது வாடகை கார் ஓட்டும் சாரதியாக பணி புரிகின்றமையும் தெரிய வந்துள்ளது.

பதுளை மாவட்ட டி.ஐ.ஜி சுஜித் வெதமுல்லாவின் அறிவுறுத்தலின் பேரில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.