சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய இடங்களில் ஒன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதை எளிதாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புள்ள நிறுவனத் தலைவர்கள் ,ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர, EKHO ஹொட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் நிறுவன உப தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.