மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு அருகிலுள்ள Sorrento கடற்கரையில் 63 வயதான ஒருவர் சுறா தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு காரணமான பெரிய வெள்ளைச் சுறாவை பிடித்து கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில், கடற்கரைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு ஆஸ்திரேலிய மீன்பிடித்துறை அமைச்சர் ஜாக்கி ஜார்விஸ், குறிப்பிட்ட சுறாவை பிடித்து கொல்லும் வகையில் இந்த விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், அனைத்து வெள்ளைச் சுறாக்களையும் அழிக்கும் வகையிலான பரந்த சுறா ஒழிப்பு நடவடிக்கைக்கு அரசு ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரணம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டில் பதிவான மூன்றாவது உயிரிழப்பாகும். இதையடுத்து சுறா கண்காணிப்பு, ட்ரோன்கள் மற்றும் சுறாக்களுக்கு அடையாளக் குறியீடுகள் பொருத்தும் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். பேர்த் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பல கடற்கரைகள் தற்போது மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.










