
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்கள்
களுத்துறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் மற்றும் கடமைகளில் ஈடுபட்டுள்ள பணிக்குழாமினருக்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலைகளுக்கு செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன.
மேலும், பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்கள் மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்ற இடையூறுகள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
