சீனிகமவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்
5 கிலோகிராம் ஹெராயினுக்கு மேல் வைத்திருந்த குற்றச்சாட்டில் சீனிகம பகுதியில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, அஹங்கம, தெல்வத்த, வதுகெதர மற்றும் சீனிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்படும் குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், 30,954 பேர் சோதனை செய்யப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 26 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 263 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 118 பேரும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
