
சீனா மீது மேலும் 50 வீத வரி: எச்சரிக்கும் ட்ரம்ப்
அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரிகளை நீக்குவது குறித்து தாம் பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய வரி விதிப்பிற்குப் பின்னர் பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வந்துள்ள நிலையில், சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு விதித்த வரியை நீக்காவிட்டால் சீன பொருட்களுக்கு மேலதிக வரி விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது.
அத்துடன், 50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக பரஸ்பர வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரியை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது நாளை முதல் அமுலாகும் வகையில் 34 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீத வரியை விதித்தது.
இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பின் புதிய அறிவிப்பு அமுலாகுமாக இருந்தால், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 104 சதவீத வரி அறவிடப்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்