சீனாவில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி!

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன.

ஒரே இரவில் கனமழை பெய்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர். இதேவேளை, தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக மழை, வெள்ளத்திற்கு 34 பேர் பலியாகியுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.