சிவில் ஆர்வலர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
-திருகோணமலை நிருபர்-
சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பும், கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பும் திருகோணமலை மனித உரிமை ஆணையகத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் திருகோணமலை மனித உரிமை ஆணையகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக வேலைகளில் கலந்து கொள்பவர்களை திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இடம்பெற்று வருகின்றது.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்பக்களும்இஊடகவியலாளாகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
அதுமட்டுமன்றி சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலைமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டு போகின்றது.
ஆகையால் மேற்படி விடயங்கள் சிவில் அமைப்புக்களுக்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ இடம்பெறக் கூடாது என வலியுறுத்தி வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மகஜர் கையளிப்பும் இன்று இடம்பெற்றதோடு அதன் ஒரு பகுதியாக திருமலையிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.