பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் தெல்கந்த சந்திப்பில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேருந்து சாரதிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, இந்த சம்பவம் செப்டெம்பர் 12-ஆம் திகதி கொழும்பு–அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
வைரலான காணொளியில், போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தில் இருந்தபோது, பேருந்து சந்திப்பின் இடதுபுறமுள்ள வீதிக்குள் திரும்பிச் செல்கிறது.
பின்னர் அந்த பக்கவீதியின் ஊடாக சிவப்பு சமிக்ஞையைத் தாண்டி மீண்டும் பிரதான வீதிக்குள் நுழைவதைக் காண முடிகிறது. இதன் மூலம் சாரதி சிவப்பு சமிக்ஞையை நேரடியாகத் தவிர்த்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் உரிமையாளர் மிரிஹான பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தை செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்துமாறு பேருந்தின் உரிமையாளருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த சாரதி சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக போதைப்பொருள் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










