சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு வீதியில் உள்ள ‘மஹகிரிதம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமை தொடர்பில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட நிபுணர்கள் குழுவொன்று அந்த இடத்திற்குச் சென்று, தற்போது நிலவும் பூமி உறுதியற்ற தன்மை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, அந்த பயணப் பாதையை சீரமைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, தற்போதுள்ள சூழ்நிலையில் ஹட்டன் நுழைவாயில் ஊடாக குறித்த உறுதியற்ற வலயத்தின் ஊடாக சிவனொளிபாத மலைக்கு செல்வதை மட்டுப்படுத்த வேண்டும் என பொலிஸ் அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, ஹட்டன் நுழைவு வீதி ஊடாக சிவனொளிபாத மலைக்குச் செல்வது ஆபத்தான நிலைமையாகக் காணப்படுவதால், வழிபாட்டிற்காக மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அந்த பயணப் பாதையில் மட்டுப்படுத்தல்களை மேற்கொள்ள நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும், சிவனொளிபாத மலை யாத்திரையை மேற்கொள்ள எதிர்பார்க்கும் பக்தர்கள், தமது பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது, நிலவும் சீற்றமான வானிலை மற்றும் பயணப் பாதைகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்படுமாறும் பொலிஸ் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

சிவனொளிபாத மலை யாத்திரை பருவம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற உடுவப் பௌர்ணமி தினத்தில் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.