சிலிண்டர் வீடு தேடி வரவேண்டுமா? அல்லது சிலிண்டரைத் தேடி வீதிக்கு வரவேண்டுமா?

கேஸ் சிலிண்டர் சின்னம் மிக முக்கியமானதொரு சின்னம்.  கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்தால்  கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும். கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால்  நாம் கேஸ் சிலிண்டரைத் தேடி வீதிக்கு வரவேண்டி வரும். இதுதான் உண்மை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாங்கள் ஏன் ரணில் விக்ரமசிங்கவை  இந்த தேர்தலில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாரிய பொருளாதார வீழ்ச்சியை எமது நாடு சந்தித்தது. நூறு வருடங்கள் சென்றாலும் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பலர் கூறினார்கள்.
இந்த நாடு ஏழு தசாப்த காலமாக விட்டுவந்த ஒட்டுமொத்த பிழைகள், குறைபாடுகள் நாட்டை அதல பாதாளத்திற்குள் தள்ளிவிட்டது. இனிமேல் இலங்கையால் சுவாசிக்க முடியாது என்றார்கள்.நாட்டை விட்டு அரசியல் தலைவர்கள் ஓடினார்கள். சிலர் நாட்டுக்குள்ளே ஒழிந்து கொண்டார்கள். முன்னாள் ஜனாதிபதி இந்நாட்டைப் பொறுப்பேற்குமாறு கூறியபோது யாரும் முன்வரவில்லை.
நாட்டிலே அனைவரும் இருளைத் திட்டிக்கொண்டிருந்தபோது, பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தபோது, நாட்டில் இருந்த இருளைப் போக்க வெளிச்சம் ஏற்றுபவராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். அவருக்கு மட்டக்களப்பு மக்களாகிய  நாங்கள் எல்லோரும் எமது பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
காலி முகத்திடல் போராட்டக் களத்திற்கு சஜித் பிரேமதாஸ சென்றபோது, போராட்டக்காரர்களால் அடித்துத் துரத்தப்பட்டார். உலகில் வேகமாக ஓடக்கூடிய ஹுசைன் போல்டை விட வேகமாக ஓட்டம் பிடித்தார். ஆனால் அநுர குமார திஸாநாயக்க போராட்ட களத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சஜித் பிரேமதாஸ பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட அதே நேரம், அநுர குமார திஸாநாயக்க பிரச்சினையை ஏற்படுத்தியவராக காணப்பட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
யாருமே தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நாடு பற்றி எரிந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாகின. வெளியே செல்ல முடியாது. கேஸுக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை,மண்ணெண்ணெய்க்கு வரிசை. பணம் இருந்தாலும் பொருள் இல்லை. மிகப்பெரிய பிரச்சினை. மிகப்பெரிய திண்டாட்டம். இவ்வாறான சூழலில் இந்நாட்டை மீட்டெடுக்க வேண்டும். ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துணிச்சலாக முன்வந்தவர் தான் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அதனை நாம் மறக்க முடியாது. அந்தக் காரணத்தினால் தான் இன்று இந்நாட்டின் அனைத்து மக்களும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இந்த நாட்டை அடுத்த ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அனுபவம், புத்திக்கூர்மை, அறிவு மற்றும் சர்வதேச தொடர்பு உள்ள ஒரு தலைவரால் மாத்திரமே முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். அவ்வாறான ஒரே ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவரின்  கேஸ் சிலிண்டர் சின்னம் மிக முக்கியமானதொரு சின்னம்.  கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்தால்  கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும். கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால்  நாம் கேஸ் சிலிண்டரைத் தேடி வீதிக்கு வரவேண்டி வரும். இதுதான் உண்மை. ஆகவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வருவதா? அல்லது வாக்களிக்காமல் கேஸ் சிலிண்டரைத் தேடி வீதிக்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலசிங்கம் பிரசாந்தன், மகளிர் அணி செயலாளர் ஏ.சுசிகலா, ஐ.தே.க மட்டு மாவட்ட அமைப்பாளர் எஸ். சுதர்சன், பொருளாளர் ஆறுமுகம் தேவராசா உள்ளிட்டோரும் உரையாற்றியதோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள்,பிரதேச அரசியல் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்