சிலிண்டரின் 2ஆவது தேசிய பட்டியல் யாருக்கு?

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டாவது தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நாளை  இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு – ஃப்ளவர் வீதியில் இன்றும் (19) கலந்துரையாடல் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, சுசில் பிரேமஜயந்த, ரமேஸ் பத்திரன, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், 2 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

குறித்த 2 தேசியப் பட்டியல் ஆசனங்களில், ஒரு ஆசனத்திற்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதுடன் அவரது பெயரை அறிவித்து வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இரண்டாவது தேசியப் பட்டியலுக்குப் பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இன்றைய சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பெயரைப் பலர் பரிந்துரைத்துள்ளனர்.

அதேநேரம், மற்றொரு நாடாளுமன்ற தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் இன்று (19 ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாளைய தினத்துக்குள் இரண்டாவது தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த பலர் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்