
சிறை கைதிகளுக்காக வருடாந்தம் 2,000 கோடி செலவு
நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது.
இதில் 7 பில்லியன் ரூபாய்கள் (700 கோடி ரூபாய்) கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக செலவிடப்படும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.
சிறைச்சாலைத் திணைக்களத்திற்குச் சொந்தமான சிறைச்சாலைகளில் 11,000 கைதிகளை அடைக்க முடியும் என்றும், தற்போது சுமார் 30,110 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவர்களில் 21,448க்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.
தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் எண்ணிக்கை 8,662 ஆகும்.
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 1,500 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், தற்போது சுமார் 3,500 கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே அதிக எண்ணிக்கையிலான கைதிகள் என்றும், வழக்கு மற்றும் தடயவியல் அறிக்கைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் தடுப்புக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தடுப்புக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.