சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்

அம்பலாந்தோட்ட – அகுங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து உரிய அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 கைதிகள், கடந்த முதலாம் திகதி சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது அவர்களில் 4 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியோ அல்லது ஆலோசனையோயின்றி இந்த கைதிகளை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல தலைமை சிறைக்காவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், தப்பிச் சென்ற 4 கைதிகளில், மூன்று கைதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மாத்தறை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர், தலைமையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதன் பரிந்துரையின் பிரகாரம், கைதிகளை விடுவிப்பதற்கு அனுமதி வழங்கிய அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி, கைதிகளை சுத்தப்படுத்தல் பணிக்கு அனுப்பிய இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி மற்றும் சுத்தப்படுத்தல் பணிக்குப் பொறுப்பாக இருந்த சிறைக்காவலர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்