சிறுவர்களுக்காக அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

இலங்கையில் சிறுவர் பணியாளர்களை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் இந்த ஆண்டிற்கான முதலாவது கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழிலாளர் பொதுச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோனி சிம்ப்சன் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வத்தலியத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கடந்த ஒரு வருடத்தில் சிறுவர் பணியாளர்களை ஒழிப்பதற்காகத் தொழில் திணைக்களம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை, திணைக்களத்தின் பெண் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் தொழில் ஆணையாளர் என்.எம்.வை. துஷாரி சமர்ப்பித்தார்.

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் சிறுவர் பணியாளர்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், இலங்கையில் தற்போது நிலவும் சிறுவர் தொழிலாளர் தொடர்பான புள்ளிவிபர ரீதியான தரவுகளைத் தொழில் திணைக்களத்தின் புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.எம்.கே. நவரத்ன முன்வைத்தார்.

எஞ்சியிருக்கும் சிறுவர் பணியாளர்களையும் முற்றாக இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை குழு உறுப்பினர்கள் இதன்போது முன்வைத்தனர்.