சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை நீக்க நடவடிக்கை

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆபாச காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான இன்டர் நெட் வோச் ஃபௌன்டேசன்(Internet Watch Foundation) உடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சேவ் தி சில்ரன் அன்ட் சைல்ட்(Save the Children & Child) குறித்த விடயத்துக்கான நிதி உதவியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இணைய வழி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் www.childprotection.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் சிறுவர்களின் துஷ்பிரயோக புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவியுடன் முறைப்பாடு செய்ய முடியும்.

பின்னர் குறித்த காணொளிகள் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டு சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 011 – 2778911 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.