“சிறுமி எந்தவொரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகவில்லை” கொலை விசாரணையின் சமீபத்திய தகவல்கள்
பண்டாரகம – அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய மூன்று நீதித்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
களுத்துறை மற்றும் பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் “மூக்கு மற்றும் வாய் வழியாக நீர் மற்றும் சேறு உடல் மற்றும் நுரையீரலுக்குள் உள்நுழைந்ததால் உயிரிழந்துள்ளதாக” பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவர். இவர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும், உயிரிழந்தவரின் உறவினர் , சிறுமியின் தந்தையுடன் மிகவும் நட்பாக பழகி வந்தவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பாத்திமா ஆயிஷா கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது வீட்டிலிருந்து மிகஅருகில் உள்ள கடைக்கு கோழி வாங்குவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மற்றும் அயலவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்திருந்த நிலையில், இரவு பகலாக தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுமியின் சடலம் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை சதுப்பு நிலப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர் கடையில் இருந்து சிறுமி திரும்பும் வரை காத்திருந்து சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமி வீட்டிற்கு திரும்பினால் நடந்தவற்றை தெரியப்படுத்துவார் என்பதால் இவரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் சிறுமியை பாலியல் பலத்காரமோ அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கோ உள்ளாக்காத நிலையில் இக்கொலைக்கான பின்னணி தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் கண்டெடுத்த போது, சந்தேக நபரும் அவர் மீது சந்தேகம் ஏற்படாதவாறு மக்கள் மத்தியில் நடமாடியதாகவும் , பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானாரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் கொலை தொடர்பான பின்னணி தற்போது இடம்பெற்று வரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.
