சிறுமி உட்பட நால்வர் விபத்துக்களில் உயிரிழப்பு

நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மில்லனிய – கெனன்துடாவ வீதியின் ரன்மிணிக வளைவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்தைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையில், முச்சக்கரவண்டியில் இருந்த குழந்தை தலையை வெளியே நீட்டியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனத்தில் குழந்தையின் தலை மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. மில்லனிய பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுமியாவார்.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் டிப்பர் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் கிராத்துருக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகன்வெவ – ஹெபரவ வீதியின் 3 ஆம் கட்டை அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சறுக்கி விழுந்து, எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கிராத்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெலகன்வெவ, கிராத்துருக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராத்துருக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

இதேநேரம் மொரகஹஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஹொரகஸ் சந்திக்கு அருகில் அவர் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளதுடன், வீதியைக் கடக்க முற்பட்டபோது அதே பஸ்ஸில் சிக்கி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை கனன்வில பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 70 வயது நபரே உயிரிழந்துள்ளார் .

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

கடுவெல – அத்துருகிரிய வீதியின் பஹல போமிரிய பகுதியில் அத்துருகிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பஹல போமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணாவார்.விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .