சிறீதரன் மட்டக்களப்பிற்கு விஜயம் : ரகசிய சந்திப்பு இடம்பெற்றதா?

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டமை தொடர்பில் குழப்ப நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் சிறீதரனது மட்டக்களப்பு விஜயம் எதற்காக என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது.

இது தொடர்பில் எமது செய்தி சேவை இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களிடம் வினவிய போது,

சிறீதரனின் மட்டக்களப்பு விஜயம் உத்தியோகபூர்வமானது அல்ல இது ஒரு நட்பு ரீதியான விஜயமே என தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  ஒரு ரகசிய வாக்கெடுப்பை நடாத்தி அதன்மூலம் செயலாளரை தெரிவு செய்து அதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் தலைவரிடம் முன்வைத்துள்ளதாகவும் தங்களது இந்த நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேற்திரன் தெரிவித்தார்.

இதேவேளை சிறிதரன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் ஆகியோரை மாத்திரம் சந்தித்ததாக தெரிய வருகின்றது. சிறீதரனின் விஜயம் நட்பு ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உள்ளக பேச்சுவார்த்தைகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரிய வரவில்லை.

அத்துடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிறீதரன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட போதும் தமிழரசுக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களை சந்திக்கவில்லை என சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செயலாளர் தெரிவு இடம்பெற்ற நாளில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் எவ்வித தொலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை என்பதும் அவர் தரப்பு கேள்விகளுக்கான பதில்களை வழங்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.