சிறப்பாக இடம்பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்..!
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமானது.
கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 27 ஆம் திகதி தொடக்கம் நேற்று மாலை வரை அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று காலை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் காலை 6 மணிக்கு கிரியைகள் விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
இதன்போது பிரதான கும்பத்திற்கு விசேட யாகம் மற்றும் விசேட அலங்கார, வேதபாராயணம், நாட்டியாஞ்சலி நடைபெற்றதைத் தொடர்ந்து பிரதான கும்பங்கள் உட்பட அனைத்து கும்பங்களும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இராஜகோபுரம் மற்றும் ஆலயத்தின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சுயம்புலிங்கமாக மூலமூர்த்தியாகவுள்ள மாமாங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஆனி உத்தரமும், அமிர்தசித்தயோகமும் கூடிய கன்னி லக்ன சுபமுகூர்த்தவேளையில் இந்த மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இன்றைய கும்பாபிஷேகத்தில் இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்குபற்றியிருந்தனர்.