சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்-

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்காத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள உப்புவெளி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதன் போது சிறந்த கோழிப் பண்ணையாளராக திருகோணமலை பட்டிணமும் சூழலும் கால்நடை வைத்திய பிரிவின் பண்ணையாளர் திரு.செல்வராஜா கிருஷந்த் தெரிவு செய்யப்பட்டார் .

விஞ்ஞானத் துறை பட்டதாரியான இவர், வேலையில்லா பிரச்சனை காரணமாக வருமானம் ஈட்டும் நோக்குடனே 200 கோழிகளை கொண்டு பண்ணை ஆரம்பித்ததாகவும், தற்போது 1800 வரையான கோழிகளுடன் பண்ணையை திறம்பட நடாத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இம்முயற்சியில் தன்னை ஊக்குவித்த பட்டிணமும் சூழலும் பிரதேச கால்நடை வைத்தியருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்.

கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை, புல் வளர்ப்பு போன்ற விடயங்களுக்காக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசில் வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் திருமதி நெளசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
கோழி வளர்ப்பு – செல்வராஜா கிருஷாந்த் – பட்டினமும் சூழலும்
ஆடுவளர்பு – பஸ்ரினா அப்துல் வாகித் – தம்பலகாமம்
புல்வளர்ப்பு – விஜயரத்தின – கந்தளாய்
மாடு வளர்பு – பதிகரன் – மூதூர் ஆகியோர்கள் தெரிவாகினர்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர்.எம்.ஏ.சுல்பிகார், இத்திணைக்கள பிரதி மாகாண பணிப்பாளர், விடயத்தோடு இணைந்த நிபுணர், பிரதிப் பணிப்பாளர்கள், அனைத்து கால்நடை வைத்திய பிரிவின் வைத்தியர்கள், பண்ணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.