சிட்னியில் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி பியூ லாமாரே-கொண்டனின் வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது.
31 வயதான லாமாரே-கொண்டன், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜெஸ்ஸி பேர்ட் மற்றும் அவரது புதிய துணைவர் லூக் டேவிஸ் ஆகியோரை 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிட்னியின் பாடிங்டன் பகுதியில் உள்ள வீட்டில் சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் பின்னர் சிட்னிக்கு தென்மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புங்கோனியா பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு ஆகியவற்றை அவர் எதிர்கொள்கிறார். எனினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதுடன், குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.
வழக்குத் தொடருநர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின்படி, லாமாரே-கொண்டன் பொலிஸ் பணியில் பயன்படுத்திய துப்பாக்கியைக் கொண்டு இந்தக் கொலைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. கொலைக்கு முன்னர் பேர்ட்டை பின்தொடர்ந்ததாகவும், அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர் அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றதாகவும் குற்றப்பத்திரிகை தரப்பு வாதிடுகிறது.
இவ்வழக்கு நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. விசாரணை சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.










