சிக்குன்குனியா பரவல் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனம் சிக்குன்குனியா தொடர்பில் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

 

இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது .

 

 

உலகம் முழுவதும் 119 நாடுகளில் வசிக்கும் சுமார் 5.6 பில்லியன் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ அதிகாரியான டயானா ரோஹாஸ் ஆல்வரஸ் தெரிவித்துள்ளார் .

“2004-2005 ஆம் ஆண்டுகளில் உலகம் தாண்டிய பரவல் ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த காலத்தில் சிறிய தீவுகள் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியதுஎனவும் அவர் குறிப்பிட்டார் .

இவ்வாண்டு தொடக்கத்தில் இந்த புதிய பரவல் இந்தியப் பெருங்கடல் தீவுகளான ரீயூனியன், மயோட்டே மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் பெரும் அளவில் பரவத் தொடங்கியதுஎன்றும் ரீயூனியனில் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா, மற்றும் தெற்காசிய (இலங்கை உட்பட) போன்ற நாடுகளிலும் பரவல் தொடங்கியுள்ளது.

சிக்குன்குனியாவிற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லைஎனவும் இது பொதுவாக ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவுகிறதுஎனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது .

 

விரிவான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது .