சாரதி உரிமம் மற்றும் வீதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்ய புதிய நடவடிக்கை

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து விதிகளைத் தொடர்ச்சியாக மீறுபவர்களின் சாரதி உரிமம் மற்றும் பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யக்கூடிய புதிய ‘புள்ளிகள் குறைப்பு முறைமை’ விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதுள்ள முறையில், வாகனச் சாரதிகள் அபராதம் செலுத்தினாலும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கின்றனர். குறிப்பாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஒரு சாரதி தண்டிக்கப்படும்போது மற்றொரு சாரதியை நியமிக்கின்றனர்.

ஆனால் அவரும் அதே தவறுகளை இழைக்கிறார். இதனைத் தடுக்கவே புதிய முறைமை கொண்டுவரப்படுகிறது. அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் புள்ளிகள் குறைந்தால், அவர்களது சாரதி உரிமம் மற்றும் பேருந்து வீதி அனுமதிப்பத்திரம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும்.

இலங்கையில் 53 சதவீதமான விபத்துக்கள் சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையினாலேயே ஏற்படுகின்றன எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிள்ளைகளை மடியில் அமரவைத்துக்கொண்டு வாகனம் ஓட்டும் பழக்கத்தைத் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

“தந்தையர்கள் பிள்ளைகளை மடியில் அமரவைத்து வாகனம் ஓட்டுவது அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பின் அடிப்படையில் அது தவறானது.

எனவே, வாகனம் ஓட்டும் போது பிள்ளைகளை சாரதி ஆசனத்தில் அமரவைப்பதைத் தடுக்கும் சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,” என அவர் விளக்கினார்.

ஆசனப் பட்டிகளுக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தும் நோக்கில் அவற்றைச் சந்தையில் மறைத்து வைக்கும் மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, வீதிப் பாதுகாப்பிற்காகக் கொண்டுவரப்படும் புதிய சட்டங்களுக்கு எதிர்க்கட்சி தனது ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்தார்.