சாரதி அனுமதிப் பத்திர மருத்துவ சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தத் திட்டம்

சாரதி அனுமதிப் பத்திரம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்க இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரம் பெற வருவோருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் நுகேகொடையின் மருத்துவ நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே இணைய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது, நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்போருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்குகிறது.

இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது என தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மக்கள் வேரஹெரவிற்கு செல்ல வேண்டும்.இது குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றும் கைரேகைகளை வழங்குவதற்கே அவர்கள் நேரில் வரவேண்டியுள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அடுத்த ஒரு மாதத்துக்குள், இந்த முறையையும் மாற்றப்பட்டு,வேரஹெரவிற்குச் செல்லாமல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.