சாய்ந்தமருது பகுதியில் கிணறுகள் குளோரினேற்றம் – பொது சுகாதார பாதுகாப்பு உறுதி

-அம்பாறை நிருபர்-

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு குளோரினேற்றம் செய்யும் விசேட செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத் தடுப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏனைய ஊழியர்களும் இணைந்து பங்களித்தனர்.

இச்செயற்பாட்டின் போது பொதுமக்களின் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளிவாசல்களில் காணப்படும் கிணறுகள் ஆகியவற்றின் நீர் அளவுகள் கணிக்கப்பட்டு, முறையான தொழில்நுட்ப வழிமுறைகளின் அடிப்படையில் குளோரினேற்றம் செய்யப்பட்டது.

சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதன்படி, கிணறுகளில் குளோரினேற்றம் செய்வதன் மூலம் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நீரால் பரவும் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் கிணற்றுநீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாகவும் சுத்தமானதாகவும் மாறுவதுடன், கிராமம் மற்றும் பகுதிகளில் நீரால் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க முடிகிறது.

குறிப்பாக மழைக்காலங்களில் கிணறுகளில் மாசுகள் சேரும் அபாயம் அதிகம் காணப்படுவதால், இவ்வாறான குளோரினேற்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவையாகும். குறைந்த செலவில், எளிதாக மேற்கொள்ளக்கூடிய இந்த செயற்பாடு சில நாட்களுக்கு நீரில் மீண்டும் கிருமிகள் உருவாகாமல் தற்காலிக பாதுகாப்பையும் வழங்குகிறது.

இந்த முயற்சி குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் நீரால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் முக்கிய பொதுச் சுகாதார நடவடிக்கையாகும் என சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.