சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம்
-அம்மப்பாறை நிருபர்-
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம், கட்டுப்பாட்டுச் சபைத் தெரிவு மற்றும் வங்கியின் 25ஆம் ஆண்டு பூர்த்தி விழாவின் தொடக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வொலிவேரியன் கலாசார மத்திய நிலையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் நெறிப்படுத்தலில், பிரதேச செயலாளர் எம்.எம். ஆசீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ. அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக வீகாஸ் கெம்பஸ் நிறுவனத்தின் முகாமையாளர் கே.எம். இஷ்ராக், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ். றிபாயா, வங்கியின் உதவி முகாமையாளர் எம்.யூ. ஹில்மி, வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நௌஷாட், வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஜ. சம்சுதீன், பிரதித் தவிசாளர் கே.எம். கபீர், பிரதேச சமுர்த்தி அமைப்பின் பொருளாளர் எம்.ஜ. ஜுனைதா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் மற்றும் வங்கியின் பங்குதாரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் விசேட அம்சமாக, தனது சேவைக் காலத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிக்கான கட்டிடத்தை விசேட வசதிகளுடன் மாவட்ட அளவில் பாராட்டப்படும் வகையில் நிர்மாணித்து வழங்கியமைக்காகவும், சாய்ந்தமருது மக்களுக்காக சமுர்த்தி திட்டத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆற்றியமைக்காகவும் முன்னாள் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ. அலியார் நினைவுச் சின்னம், பதக்கம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், வங்கியின் 25 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விழாவுக்கான இலட்சனை அதிதிகளால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 2025ஆம் ஆண்டின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அதனுடன், 2025 ஆம் ஆண்டின் சிறந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக எம்.எம். ஜாபீர், யூ.எல். ஜஃபர், ஜே.எம். றம்ஸா மற்றும் எம்.எஸ்.எம். நௌஷாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு பாராட்டப்பட்டனர்.
