சாப்பிடும்போது இதை மட்டும் செய்ய வேண்டாம்

நம்மில் பலருக்கும் ஆரோக்கியமான உணவுகள் பற்றிய புரிதல் ஓரளவு கிடைத்திருந்தாலும், ‘சரியாக உணவு உண்பது எப்படி’ என்பது பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை.

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

‘சர்வதேச உணவு தினமான’ இன்று ஆரோக்கியமான உடலுக்கு என்ன சாப்பிட வேண்டும் – அதை எப்படி சாப்பிட வேண்டும் – உணவு விஷயத்தில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பன குறித்து பார்க்கலாம்…

எந்தவொரு உணவையும் வேகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் அப்படி சாப்பிடுவது செரிமானக் கோளாறுக்கோ, தேவைக்கு / அளவுக்கு அதிகமாக சாப்பிடும் சூழலுக்கோ ஒருவரை தள்ளிவிடும். எனவே நன்கு மென்று பொறுமையாக சாப்பிடவும்

சாப்பிடும்போது டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது, வேறு எதுவும் வேலை பார்ப்பது போன்றவை கூடாது. உணவின் மனம், சுவை, அளவு எல்லாவற்றையும் உணர்ந்து, அதில் கவனம் செலுத்தி சாப்பிடவும்

பசி எடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். போர் அடிக்கிறது, மன அழுத்தமாக இருக்கிறது, கிரேவிங்ஸ் இருக்கிறது என சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். கிரேவிங்ஸ் எடுக்கும்போது பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள். இதன்மூலம், உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும், உணவுக்கான பசியும் அதிகம் இருக்காது.

இரவு உணவை தாமதமாக சாப்பிடக்கூடாது. படுக்கைக்கு செல்வதற்கு 2 – 3 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடுவது உடல் இயக்கத்துக்கு மிகவும் நல்லது.

செரிமானக் கோளாறுகளை இதன்மூலம் தவிர்க்க முடியும்.

சோடியம், சர்க்கரை அதிகமுள்ள பொருட்கள், வறுத்த உணவுகளை தவிர்த்துவிடவும். ஏனெனில் அவை வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதோடு, பசியை தூண்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

உணவு சாப்பிடும்போது, சிறிய அளவில் தட்டில் உணவு வைத்து சாப்பிடவும். இப்படி பலமுறை உணவு பரிமாறி சாப்பிடுகையில், நிறைவாக சாப்பிட்ட எண்ணமும் கிடைக்கும், தேவையான அளவும் சாப்பிட்டுவிட முடியும்

தாகத்தின்போது குளிர்பானங்கள், சர்க்கரையோடு ஜூஸ் போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். தினமும் 6 முதல் 8 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பதே சிறந்தது.

காலை உணவை தவிர்க்கவே கூடாது. போலவே காலை உணவு அதிக கொழுப்புச்சத்துடனோ, துரித உணவாகவோ, சர்க்கரை அதிகமாகவோ இல்லாமல் ஆரோக்கியமான உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.