சாணக்கியனுக்கு எதிராக விசாரணை கோருகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தமிழ்  தேசிய  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப வாக்கெடுப்பின் போது, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 09 அன்று கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரையை மேற்கோள் காட்டிய பிரதமர், கட்டுக்கடங்காத கும்பல்களால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு சாணக்கியன் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்தார்.

“20வது திருத்தச் சட்டம் மற்றும் நாட்டுக்கு எதிரான ஏனைய கொள்கைகளுக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமையினால் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சாணக்கியன் கூறினார்.

மக்களுக்குத் துரோகம் இழைத்ததற்காகத் தங்கள் வீடுகள் தாக்கப்பட்டன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்”, என சாணக்கியனின் அன்றைய உரையின் சில பகுதிகளை பிரதமர் இன்று சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வாறு இவ்வாறான கருத்தை வெளியிட முடியும் என கேள்வி எழுப்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு தீ வைப்பதற்கும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலை மற்றும் தாக்குதலுக்கும் அவர் ஒப்புதல் அளிக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைவதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மன்னிப்புக் கேட்டு தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டும், என்று பிரதமர் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால், சபாநாயகருக்கு, இந்த விடயம் தொடர்பில் விவாதம் செய்து விசாரணைக் குழுவில் முன் வைத்து, அதன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரம் உண்டு என பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.