சவளக்கடை பொலிஸ் பிரிவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் வெற்றுக்காணி ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பான குறித்த கைக்குண்டு கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி வழியாக பாடசாலைக்கு தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணிக்குள் கிடந்த கைக்குண்டை இனங்கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த சவளக்கடை பொலிஸார் கைக்குண்டை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்க செய்வதற்காக இன்று நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று மேலதிக விசாரணைகளை சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்