சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரி மாயம்!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் (IPA) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலங்கை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரி, மே மாதம் நாடு திரும்பியிருக்க வேண்டும்.

எனினும் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் திரும்பாதது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிரான்சில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் கடந்த சனிக்கிழமை குறித்த உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படும் அதிகாரியாக அறிவிக்கும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

இதேவேளை கடந்த வாரம், ஐக்கிய இராச்சியத்தில் (UK) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் நாடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை திரும்பவில்லை எனவும், காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இலங்கை விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள சென்று நாடு திரும்பாத சம்பவங்கள் பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்