சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தவம் தம்பிப்பிள்ளை

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் – கைதடியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் தவம் தம்பிப்பிள்ளை 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முதன்முதலில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சையை ஆரம்பித்து வைத்திருந்தார். இதன் பின்னர் பல சிறுநீரக மாற்றுச் சத்திரச் சிகிச்சைகளை இவர் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்க மருத்துவ உதவி நிதியம் இலங்கையில் பல்வேறு சுகாதார, கல்வி மற்றும் வலுவிழந்தவர்களுக்குப் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதன் உறுப்பினராக கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுப் பல்வேறு சேவைகளை இவர் ஆற்றி வருகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.