
சர்வதேச காடுகள் தினம் இன்று
சர்வதேச காடுகள் தினம் இன்றாகும்.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மற்றும் விலங்குகள் அனைத்திற்கும் உயிர் வாழ்வதற்குக் காடுகள் முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன.
காடுகளின் மூலம் தான் உலகத்தின் உயிர் மூச்சு அடங்கியுள்ளது என்றால் மிகையாகாது.
காலப்போக்கில், மக்கள் தொகை பெருக, காடுகள் அழிக்கப்படுவதால், உலகின் காடுகளின் பரப்பளவு வேகமாகக் குறைந்து வருகிறது.
குறைந்து வரும் இந்த வனப் பரப்பை உயர்த்தி, வனப் பாதுகாப்பில் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி ஆண்டுதோறும் மார்ச் 21ஆம் திகதி சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் இலங்கை ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகளை இழக்கின்றமை மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும்.
காடுகளை அழிப்பதால் காடுகளில் வசிக்கும் விலங்குகளைக் கூட நாம் இழந்து வருகிறோம்.
சில தேசிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் கூட உலகில் அழிந்து வருவதற்குக் காடழிப்பு ஒரு முக்கிய காரணமாகும்.
“காடுகளும் உணவும்” என்ற தொனிப்பொருளில் இம்முறை காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உணவு வழங்குதல், விவசாயத்திற்கு உதவுதல் மற்றும் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் காடுகளின் பன்முக செயற்பாட்டை இது வலியுறுத்துகிறது.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் தூண்களான காடுகள், மில்லியன் கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் என ஐக்கிய நாடுகள் சபை காடுகள் தினத்தை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளது.
காடழிப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் ஹெக்டேர்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
காட்டுத்தீயினால் சுமார் 70 மில்லியன் ஹெக்டேர்கள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காடுகளைப் பாதுகாப்பதும் மீட்டெடுப்பதும் அவசரமானது மற்றும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு ,காட்டை சார்ந்துள்ளது என்பதையும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியது.
