சர்வதேச அளவில் சாதித்த கால்தீன் பாத்திமா லனாவுக்கு பாராட்டு
சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி சாளம்பைக்கேணி கமு/சது/அஸ்- சிராஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தரம் 9ல் கல்வி பயிலும் மாணவி கால்தீன் பாத்திமா லனா சர்வதேச அபாகஸ் (Abacus) போட்டியில் முதலிடம் பெற்றமையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்றது.
அல்- மீஸான் அறக்கட்டளை இலங்கையின் “திறமையானவர்களை தேடி வாழ்த்துதல்” வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஸான் அறக்கட்டளை இலங்கையின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சர்வதேச சாதனை மாணவி லானாவை பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம், பதக்கம், சான்றிதழ், பரிசில்கள் போன்றன வழங்கி கௌரவித்தார்.
நகருக்கு தொலைவில் உள்ள கிராமத்தவர்கள் சாதிக்க தகுதியற்றவர்கள் என்ற சிந்தனையை உடைத்து சர்வதேச அரங்கில் தனது ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவியை கிழக்கு மண்ணின் மகளாக போற்றி கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதுபோன்ற பல சாதனையாளர்களை ஆசிரியர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், சாதனையாளர்களை தூக்கிவிட எப்போதும் மீஸான் அறக்கட்டளை தயாராக இருப்பதாகவும், சாதனையாளர்களுக்கு ஒழுக்கம் கட்டாயம் அவசியமாக இருப்பதுவும், இங்கு உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஸான் அறக்கட்டளை இலங்கை தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அல்- மீஸான் அறக்கட்டளையின் இலங்கை பிரதிப் பொது செயலாளர் டப்லியூ. ஷவ்தப் உஸைம் , விருதுகள் மற்றும் திறமையானவர்களை தேடி வாழ்த்துதல் பிரிவின் பணிப்பாளர் ஜே.எம். கஸான், அல்- மீஸான் அறக்கட்டளையின் இலங்கை இளைஞர் பிரிவின் நிர்வாகிகளான ஜே.எம். பாஸித், கே.எம். ருஸ்தி, பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாத்திமா லானாவின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்