சம்பந்தனின் முதுமையை காட்டி தலைவர் பதவிக்கு ஆசைப்படும் சுமந்திரன்

-யாழ் நிருபர்-

 

சம்பந்தனின் முதுமையை காரணம் கூறி கூட்டமைப்பின் தலைவர் பதவியை குறி வைக்கும் நோக்கில் சுமந்திரன் எம்.பி காய் நகர்த்துவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றம் சாட்டினார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகையில், தமிழரசு கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார் அது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீரங்கேஸ்வரன், சம்பந்தன் ஐயாவுக்கு முதுமை ஏற்பட்டது என்பது சுமந்திரன் கூறித் தான் தெரிய வேண்டியது அல்ல.

ஏற்கனவே சம்பந்தன் ஐயா பதவி விலகி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சுமந்திரன் சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்திற்கு எத்தனை தடவைகள் வந்தார் என கணக்கு போட்டு கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சம்பந்தன் தலைமை பதவியை இலக்கு வைத்து சுமந்திரன் காய் நகர்த்துவதாக அரசியல் பரப்பில் பேசப்பட்டு வரும் நிலையில் அவருடைய கருத்து தலைமை பதவியை இலக்கு வைத்து தான் என எண்ண தோன்றுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்