சமையலறையில் முகம் கவிழ்ந்த நிலையில் எலும்புக்கூடு : அதைச் சுற்றி பாத்திரங்கள்!
ஹைதராபாத், நாம்பள்ளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் நேற்று திங்கட்கிழமை மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் உள்ளூர் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
நாம்பள்ளி சந்தைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீடு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு உள்ளூர் நபர், கிரிக்கெட் விளையாட்டின் போது வீட்டிற்குள் விழுந்த பந்தை எடுக்க சென்ற போது, அங்கு எலும்புக்கூடு ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் இதனை வீடியோவாக பதிவு செய்து, அது பேஸ்புக்கில் வைரலானது. வீடியோவில், வீட்டின் சமையலறை எனத் தோன்றும் இடத்தில் முகம் கவிழ்ந்த நிலையில் எலும்புக்கூடு இருப்பது தெரிகிறது. மேலும் அதைச் சுற்றி சில பாத்திரங்கள் காணப்பட்டன.
ஹைதராபாத் பொலிஸின் CLUES குழு (குற்றவியல் விசாரணை மற்றும் ஆதார சேகரிப்பு பிரிவு) சம்பவ இடத்திற்கு விரைந்து, மேலதிக ஆய்வுக்கு மாதிரிகளை சேகரித்தது.
எலும்புக்கூடு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் இறந்தவரின் அடையாளம் மற்றும் இறப்பு குறித்த காரணங்களை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.