
சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள்!
மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பாதிப்புகள் உள்ள நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட குடும்பங்களை இலங்கை தூதரகம் கேட்டுக்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்து தகாத நடத்தையை வெளிப்படுத்திய மேலும் இரண்டு இலங்கையர்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இரு நபர்களும் தங்கள் கடவுச்சீட்டுக்களை இழந்ததால், தூதரகம் இரண்டு தற்காலிக கடவுச்சீட்டுக்களை இலவசமாக வழங்கியதாக தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
அவர்கள் தற்காலிக தங்குமிடத்தில் இருந்தபோது தூதரகம் அவர்களின் நலனை உறுதிசெய்து, புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
