சந்தையில் கீரி சம்பா அரிசிக்குப் பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவிப்பு
புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள், கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் விற்பனைச் செய்வதால், நுகர்வோர் கீரி சம்பாவை கொள்வனவு செய்வதைத் தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது .
இதனைக் கருத்தில் கொண்டு, சில்லறை விற்பனையாளர்களும் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
இதேநேரம் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்கி இலாபம் ஈட்ட முயற்சிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இலங்கை சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க வேண்டும் என தேசிய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அத்துடன், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளனர்.
