சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய மீட்கப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபரான பெண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்களைக் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அந்தச் சந்தேகநபரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை மாலை விசாரணை அதிகாரிகளால் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவென வீதிப் பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.

அந்த வீட்டில் இருந்து,

10 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 இலட்சம் ரூபா பணம், துப்பாக்கி ஒன்று, தோட்டா ஒன்று, மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படும் முன் மற்றும் பின் பக்க போலி வாகன இலக்கத் தகடுகள் 08, முச்சக்கர வண்டி முன் மற்றும் பின் பக்க போலி இலக்கத் தகடுகள் 04, மோட்டார் வாகன முன் மற்றும் பின் பக்க போலி இலக்கத் தகடுகள் 18, இலத்திரனியல் தராசு ஒன்று, தங்க சங்கிலிகள் 02, தங்க வளையல் ஒன்று, தங்க மோதிரம் ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட சொத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்தச் சந்தேகநபருக்கு கிடைத்துள்ளமை தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.