சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடை செய்யக் கோரியும் திருகோணமலையில் மீனவர்களினால் இன்று புதன்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சிறிமாபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை – கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டகாரர்களால் திருகோணமலை மாவட்டத்தில் 176 பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறும், இதனால் கடல் வளம் அழிந்து போவதாகவும், மீனவர்களின் தொழில் அற்று போவதாகவும் குறிப்பிட்டதோடு, அரச அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.