சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்-

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் போட்ரி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து, விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.ஏ.பி.ஆர்.பிரேமலாலின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் டி.என்.ஏ.தசநாயக்க தலைமையில் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் காசல்ரீ நீரத்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமு ஓயாவின் கிளை ஓடை ஒன்றில், பாரிய சூழல் சீர்கேடு ஏற்படும் வகையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட காலமாக மிகவும் ரகசியமான முறையில் இவ்வாறு சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் இப்பிரதேசத்தில் இவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக, விசேட கோட்ட குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வர் மற்றும் உபகரணங்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்படைக்கப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 23ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.