
சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக 150 வகையான மருந்துகள் பயன்பாடு!
இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக சுமார் 150 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக அந்த சபையின் தலைவர் வைத்திய நிபுணர் இந்திகா வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் நோயாளர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள் போதைக்கு அடிமையானவர்களால் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரியவர்களுக்கு மட்டுமல்லாது 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் இத்தகைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 62,000 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றில் நாட்டில் 92,000 முதல் ஒரு இலட்சம் பேர் வரை போதைப்பொருள் அடிமைகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையானவர்கள் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்துவதற்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தயாராகி வருவதாக அதன் தலைவர் வைத்திய நிபுணர் இந்திகா வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.