சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் குச்சவெளியில் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய புலனாய்வு தகவலுக்கு அமைவாக கடற் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும், ஒன்பது பெண்களும் இருப்பதாகவும், 20 வயதிற்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.