சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகளுடன் 5 பேர் கைது

மன்னார் வான்கலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்படடவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1055 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை கடற்படையின் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டை சுற்றியுள்ள கடலோர மற்றும் கடற்பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மற்றும் கடலட்டைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.