
சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்ட இலங்கையர் சுட்டு படுகொலை
சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்ட இலங்கையர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இணையத்தில் காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது.
பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக நாடு கடக்க முற்பட்ட இலங்கை அகதி கொல்லப்பட்டுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதியால் லட்வியா நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது லட்வியா பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.
இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில் ஒருவர் இறந்து கிடப்பதையும் மற்றொருவரின் ஆடைகள் கிடப்பதையும் மேலும் ஒரு இளைஞர் அங்கு நிற்பதையும் காண முடிகிறது.
சட்டவிரோதமாக லட்வியா நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு படை சுட்டு பெலாரஸ் நாட்டு எல்லைக்கு உள்ள ஆற்றுப்பகுதிக்குள் தள்ளி விட்டதாக அங்கிருந்த இளைஞர் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பெலாரஸ் நாட்டு இராணுவத்தினர் அங்கு வந்து சேர முன்பே சுடப்பட்டவர் உயிரிழந்து விட்டதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
இந்நிலையில் இவ்வாறு சுடப்பட்டு உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் பகுதியை சேர்ந்தவர்கள் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிய வந்துள்ளது. எனினும் உயிரிழந்தவர் தொடர்பாக தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைய வேண்டாம் என பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக குறித்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
 
			

