சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற வலிநிவாரணி மாத்திரைகள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
படகில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை வலிநிவாரணி மாத்திரைகள், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கண்காணிப்புப் பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) அதிகாரிகள் அதிகாலை 5 மணியளவில் தென் கடலில் உள்ள முசல் தீவு அருகே ஒரு படகு நகர்வதைக் கண்டதாக மரைன் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கடலோர காவல்படை குழுவினர் குறித்த படகை நெருங்கியதும், அதில் இருந்தவர்கள் இருளில் கடலில் குதித்து தப்பினர்.
படகு கைவிடப்பட்டதால், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் அதை கரைக்கு இழுத்தனர். அதன்பின்னர் படகை சோதனையிட்ட போது படகில் 13 மூட்டைகளில் சுமார் ஒரு லட்சம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
குறித்த வலிநிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த படகு பதிவு செய்யப்படாமல் இருந்த போதிலும் அதன் உரிமையாளர் வெத்தளை குறவன்தோப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்படை முன்னெடுத்துள்ளது.
