சஜித் தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!

நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சூழ்நிலைக்கும் எதிராக வலுவான எதிர்க்கட்சியாக முன்நிற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அனுராதா ஜயரத்ன, ராசமாணிக்கம் சாணக்கியன், மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் கயந்த கருணாதிலக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட உடன்பாடு குறித்து இன்று கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று இரு கட்சிகளுக்கும் இடையே மற்றொரு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது குறித்து விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டார்.

அதன்படி, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரிவானதொரு கூட்டணி அமைப்பது சிரமமான காரியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், புரிந்துணர்வு அடிப்படையில் குறித்த தேர்தலில் செயற்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளினது தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

அதற்கு முன்னதாக கலந்துரையாடி பல தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளன.

அனைவரும் ஒரே கருத்துடன் இருந்தால் ஒன்றிணைவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்