சங்கிலி அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் பலி – மட்டுவில் சம்பவம்

 

மட்டக்களப்பில்  வயோதிப பெண் ஒருவரின்  தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர் நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 24ம் திகதி காலை 6.30 மணிக்கு குறித்த வயோதிப பெண் தனது வீட்டின் முன்னால் உள்ள வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்தொடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து வீதியில் வீழ்ந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பெற்று வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று ஆராய்ந்து சடலம் வைக்கப்பட்டிருக்கும் மட்டு போதன வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.