
கோழிக்கூட்டினுள் தண்ணீர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
-மஸ்கெலியா தினகரன்-
கோழி கூட்டில் இணைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பிலிருந்து மின்சாரம் தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் தனியார் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 23 ம் திகதி மதியம், கடும் சுகவீனம் காரணமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனையடுத்து, குடும்பத்தினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, குறித்த நபர் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க கோழிக்கூட்டை திறந்தபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தமை தெரிய வந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, சுப்பிரமணியம் திருச்செல்வம் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
